ஊட்டியில் மழை குறைந்து மீண்டும் பனி பொழிவு துவக்கம்

ஊட்டி, ஜன. 18:  நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக அக்டோர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன் பின் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து மார்ச் மாதம் வரை பனிபொழிவு காணப்படும். இம்முறை டிசம்பரில் சில நாட்கள் பனி காணப்பட்டது. அதன் பின் இம்மாத துவக்கம் முதல் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து மழை காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு முன்பிருந்து 4 நாட்களாக கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழை காணப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்பட்டனர். இந்நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று முன்தினம் முதல் மழை குறைந்தது.

இதன் காரணமாக நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. பகலில் நல்ல வெயிலான காலநிலை நிலவியதால் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் இருந்தது. இதனிடையே பருவம் தவறி இம்மாதம் இரண்டாவது வாரம் வரை பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பினாலும், தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாய பயிர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories: