×

ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப் முடிவு? இறுதி கட்டத்தை நோக்கி ஈரான் போர்: வரும் நாட்கள் முக்கியமானது என அமெரிக்க ராணுவ அமைச்சர் தகவல்

துபாய்: ஒருமாதத்திற்கு மேலாக நடந்து வரும் மேற்கு ஆசியா போர் முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கிறது. ஈரானின் ராணுவ திறன்களை போதுமான அளவுக்கு அழித்து விட்டதால், இனி ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும் கூட போரை நிறுத்திக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, இப்போரில் அடுத்து வரும் நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 28ம் தேதி கூட்டு தாக்குதல்களை தொடங்கின. அதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் கொடுத்ததால், மேற்கு ஆசியா போர் வளைகுடா முழுவதும் பரவியது. இப்போரால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளாவிய எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபட்டு பல உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது.

இப்போரை 4 அல்லது 6 வாரத்தில் முடிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் எந்த ஒப்பந்தத்திற்கும் ஈரான் தயாராக இல்லாததால், ஒரு மாதத்தை தாண்டி நிச்சயமற்ற நிலையில் போர் நீடிக்கிறது. இந்நிலையில், இப்போரில் திடீர் திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் முயற்சியை பிற்காலத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமென்றால் இப்போர் 6 வாரத்தை தாண்டிவிடும் என்று டிரம்ப் மதிப்பிட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணை கையிருப்பை அழிப்பது, அணு ஆயுத தயாரிக்க விடாமல் அதன் கட்டமைப்புகளை சேதப்படுத்துவது, ஆட்சி மாற்றம், முக்கிய அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளை அழிப்பது என அமெரிக்க தனது இலக்குகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாகவும் இனி பேச்சுவார்த்தை மூலம் ஈரானுக்கு அழுத்தம் தர டிரம்ப் முடிவு செய்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமென்றால், அதற்கு ஐரோப்பா மற்றும் வளைகுடாவில் உள்ள நட்பு நாடுகளும் போரில் இணைய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘‘மேற்கு ஆசியா போர் பாதி கட்டத்தை எட்டி விட்டது. ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்துள்ளது. அதன் ஏவுகணைத்தாக்குதல்களைக் குறைத்துள்ளன. ஈரான் தலைமை மீது வலுவான அழுத்தம் உருவாக்கியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திறன் முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். ஈரான் போர் நிலவரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் மற்றும் உயர்மட்ட தளபதி டான் கெய்ன் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் ஹெக்சேத் கூறுகையில், ‘‘ஈரானில் 11,000 இலக்குகளை தகர்த்து விட்டோம். தற்போதைய மோதலில் அடுத்து வரும் நாட்கள் மிகவும் முக்கியமானதாக அமையும். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் உண்மையானவை. அவை வலுப்பெற்று வருகின்றன’’ என்றார். ராணுவ தளபதி கெய்ன் கூறுகையில், ‘‘ஈரானின் ராணுவ திறன்களை பலவீனப்படுத்தவும் அழிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடரும். எங்கள் படைகள் களத்தில் உள்ளன. எனவே பேச்சுவார்த்தை குறித்து ஈரான் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஈரான் விவேகத்துடன் நடந்து கொண்டால் அவர்கள் ஒப்பந்தம் செய்வார்கள். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுபவர் அல்ல. பின்வாங்குபவரும் அல்ல’’ என்றார்.

32வது நாள் போரில்…
* மேற்கு ஆசியாவில் 32வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. இதில் அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் ஈரானின் முக்கிய அணுசக்தி மையம் அமைந்துள்ள இஸ்பஹான் அருகே வெடிமருந்து கிடங்கை குறிவைத்து 900 கிலோ பங்கர் வகை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோவை அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
* இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை ஏவி தாக்கியது. இதில் கப்பலில் ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் அமைக்கப்பட்டது. முழுவதும் எண்ணெய் பீப்பாய்கள் நிரப்பப்பட்ட இக்கப்பல் சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது.
* லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் ஐநாவின் 3 அமைதி காப்பாளர்கள் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.

* ‘தைரியமிருந்தா போய் எண்ணெய் எடுத்துக்குங்க’: விரக்தியில் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் தலையை துண்டிப்பதில் தலையிட மறுத்த இங்கிலாந்தை போல ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக விமானங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாத அனைத்து நாடுகளுக்கும் ஒரு யோசனையை சொல்கிறேன். முதலாவதாக அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள். எங்களிடம் நிறைய இருக்கிறது. இரண்டாவது, தாமதமான தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்திக்கு சென்று நீங்களே அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்காக போராட கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு உதவாதது போலவே அமெரிக்காவும் இனி உங்களுக்கு உதவாது. ஈரான் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. கடினமான பகுதி முடிந்து விட்டது. நீங்களே சென்று உங்கள் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என கேலி செய்துள்ளார். இதே போல, பிரான்சும் தங்களுக்கு உதவவில்லை என கடுமையாக கண்டித்த டிரம்ப், நேட்டோ அமைப்பு தங்களை கைவிட்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார்.

Tags : Trump ,Iran ,US ,Defense Secretary ,Dubai ,West Asia ,US President ,Strait of Hormuz ,
× RELATED மிச்சிகன் யூத வழிபாட்டு தலத்தில்...