×

அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் வெள்ளைமாளிகை அடியில் ரகசியமான ராணுவ வளாகம்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் தனியார் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் பால்ரூமுக்கு அடியில் பிரமாண்டமான ராணுவ வளாகம் கட்டப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இது அவரது எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி கட்டிடம் கடந்த 2025 அக்டோபரில் இடிக்கப்பட்டு, தனியார் நிதியுதவியுடன் அதிபர் டிரம்பின் கனவுத்திட்டமான பால்ரூம் கட்டப்பட்டு வருகிறது.

இது பாரம்பரிய கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையிலும், புல்லட் புரூப் கண்ணாடிகள், டிரோன் தாக்குதலை தாங்கும் மேற்கூரைகள் என உயர்மட்ட பாதுகாப்புடனும் ரூ.3,300 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கு முன் கிழக்கு கட்டிடத்தின் அடியில் பழைய பாதுகாப்பு பதுங்கு குழியான பிரசிடென்சியல் எமர்ஜென்சி ஆபரேஷன்ஸ் சென்டர் இருந்தது. தற்போது இது இடிக்கப்பட்டு புதிய பிரமாண்டமான ராணுவ வளாகம் கட்டப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், அதிபர் டிரம்ப் முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கடந்த 29ம் தேதி அளித்த பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டின் வாராந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்ட போது, ‘‘அதைப் பற்றி உங்களுக்கு மேலும் தகவல்கள் கூற முடியாது.

ராணுவம், வெள்ளை மாளிகையில் உள்ள தங்களது வசதிகளை மேம்படுத்தி வருகிறது’’ என்று மட்டும் கூறி உள்ளார்.  இத்திட்டத்தின் ரகசியத்தன்மை காரணமாக தேசிய தலைநகர திட்டமிடல் ஆணையத்தின் ஒப்புதல் பால்ரூம் கட்டுமான திட்டத்திற்கு பெறப்படவில்லை. எனவே இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக தேசிய வரலாற்றுப் பாதுகாப்பு அறக்கட்டளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : White House ,US ,President Trump ,Washington ,President ,Trump ,White ,House ,
× RELATED இந்தோனேஷியாவில் நடுக்கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மீட்பு