×

இஸ்ரேலியர்களை கொன்றால் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டம் நிறைவேற்றம்

ஜெருசலேம்: இஸ்ரேல் மக்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை வழக்கமாக்கும் புதிய சட்டம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான தேசியவாத கொலை குற்றங்களில் குற்றச்சாட்டப்படும் பாலஸ்தீனர்களுக்கான தண்டனையை அதிகரிக்க தீவிர வலதுசாரிகள் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதன் உச்சகட்டமாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா, இஸ்ரேல் மக்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் மேற்கு கரை பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை ராணுவ சிறப்பு நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. அதே சமயம், பாலஸ்தீனர்களை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் யூத மக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இந்த மசோதா சர்வதேச மரபுகளுக்கு முரணாக, கருணை காட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்றும் பாகுபாடு காட்டுவதாகவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கவலை தெரிவித்தனர். ஆனாலும், 62 எம்பிக்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

48 எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் அவையிலேயே கையை உயர்த்தி கொண்டாடினார்.

மேற்கு கரையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தனது கணவரை இழந்த தீவிர வலதுசாரி பெண் எம்பி லிமோர் சன் ஹார்-மெலெக் கண்ணீர் மல்க வரவேற்றார். அடுத்த 30 நாளில் இந்த சட்டம் அமலுக்கு வரும். ஆனாலும், இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்படும் என்பதால் சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்க்கட்சியினர் கூறி உள்ளனர்.

Tags : Palestinians ,Israelis ,Jerusalem ,Israeli ,
× RELATED இந்தோனேஷியாவில் நடுக்கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் 21 பேர் மீட்பு