நியூயார்க்: ஈரான் போரால் அமெரிக்காவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டியிருக்கிறது. அமெரிக்காவில் நிறைய கச்சா எண்ணெய் இருப்பதாவும், அதை வாங்கிக் கொள்ளுமாறும் நட்பு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தூது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு நிலைமையோ தலைகீழாக உள்ளது. 2022க்குப் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு கேலன் (3.8 லிட்டர்) சாதாரண பெட்ரோலின் விலை 4 டாலர்களை (ரூ.380) தாண்டியிருக்கிறது.
உக்ரைன் போரால் 2022ல் இதே போன்று பெட்ரோல் விலை அதிகரித்த நிலையில் 4 ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் 4 டாலரை தாண்டி உள்ளது. ஒருவாரத்திற்கு முன்பு 3.85 டாலராக இருந்தது. இதே போல, டீசலின் விலை சராசரியாக ஒரு கேலனுக்கு 5.45 டாலராக (ரூ.520) உள்ளது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு கேலன் டீசலின் விலை சுமார் 3.76 டாலராக (ரூ.357) மட்டுமே இருந்தது. போர் நீடித்தால் பெட்ரோல், டீசல் விலைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
