பாங்காக்: ஈரான் போர் காரணமாக எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்து வருவதால் ஆசிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அதிகளவில் போட்டியிடுகின்றன. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகின் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை வலுப்படுத்த, ஏற்கனவே கடலில் உள்ள ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதிகள் மீதான தடையை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தி உள்ளது.
இந்த தடை முதலில் இந்தியாவுக்கும் பின்னர் உலகின் பிற நாடுகளுக்கும் தளர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய எண்ணெயை வாங்க ஆசிய நாடுகள் போட்டி போடுகின்றன. ஈரான் போருக்கு முன்பு சீனா, இந்தியா, துருக்கிய ஆகிய நாடுகள் மட்டுமே ரஷ்ய எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளர்களாக இருந்தன. உக்ரைன் போரால் ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக இந்நாடுகள் கணிசமான தள்ளுபடிகளையும் பெற்றன. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்க தளர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால், ஆசியாவில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மீது புதிய ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன. அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான பிலிப்பைன்ஸ் 5 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. அந்நாட்டில் எரிசக்தி நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதே போல, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் ரஷ்ய எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, கடலில் இன்னும் இருக்கும் சுமார் 126 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்க்காக அந்நாடுகள் சீனா மற்றும் இந்தியாவுடன் போட்டியிடும் என கெப்ளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 5.5 மில்லியன் முதல் 6 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தேவைப்படுகிறது.
* இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
ஈரான் போருக்குப் பிறகு ரஷ்ய எண்ணெய் மீதான தடை முதலில் இந்தியாவுக்கே நீக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்தே மற்ற நாடுகளுக்கு நீக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா கணிசமான ரஷ்ய எண்ணெய் சரக்குகளை வாங்கி உள்ளது.
ஆனாலும், மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்ட, ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் போதுமானதாக இருக்காது என்று கெப்ளர் தரவுகள் காட்டுகின்றன. ஈரான் போருக்கு முன்பு சுமார் 1 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய இறக்குமதி, மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1.9 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்தது. ஈரான் போருக்கு முன்பு, இந்தியா மத்திய கிழக்கிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது.
* சீனாவுக்கு கவலையில்லை
கெப்ளரின் மதிப்பீட்டின்படி, சீனாவில் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இது அதன் ஒட்டுமொத்த கடல்வழி கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குச் சமமாகும். எனவே, இது போரினால் ஏற்படும் குறுகிய கால பாதிப்புகளைத் தணிக்கிறது. போதுமான கையிருப்பு மற்றும் நிதி பலம் இருப்பதால், சீனாவுக்குச் செல்லும் சில ரஷ்ய சரக்குகள், மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள நாடுகளுக்குத் திருப்பி விடப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
