கோவை மாவட்டத்தில் நாளை 663 பள்ளிகள் திறப்பு

கோவை, ஜன. 18: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், வரும் ஜனவரி 19-ம் தேதி (நாளை) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் பலர் விருப்பம் தெரிவித்ததின் பேரில் இந்த நடவடிக்ைகயை அரசு எடுத்துள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குடிநீர், உணவு வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டும். மாணவர்கள் நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிக்கூடாது. மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு பழக வேண்டும். ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு அரசு பேருந்தில் பயணிக்கலாம். தவிர, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த தேவையில்லை, இறை வணக்கம் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் வேண்டாம். எந்த ஒரு மாணவரையும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 663 பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கிளாஸ் ரூம், தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு குறுஞ்செய்தி, போன் மூலமாக எத்தனை பேர் நேரடியாக பள்ளிக்கு வருவதற்கும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவும் விரும்பம் உள்ளது என கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சரி பார்க்கப்படும். இதில், பிரச்னை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் சுகாதாரத்துறையினர் மூலம் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்புக்கான மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

தவிர, மாணவர்களுக்கு ஒரு படிவம் அளிக்கப்பட்டு மாணவர்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து விரவங்களும் அதில் பதிவு செய்யப்படவுள்ளது. உடல் ஆரோக்கியமாக உள்ள மாணவர்கள் மட்டும் வகுப்பிற்கு அனுப்பப்படுவர். ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வகுப்புகள் இல்லாத டீச்சர்கள், மாணவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர். இறை வணக்கம் உள்ளிட்ட கூட்டங்கள் நடத்தப்படாது.

முதல் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். ரெகுலர் வகுப்பு, ஆன்லைன் கிளாஸ் நடத்த என ஒவ்வொரு பள்ளியிலும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.

Related Stories: