ஜோதிட சாஸ்திரம் என்பது அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய சின்ன பேழை என்றால் அது மிகையில்லை. கிரகங்களும் பாவங்களும் அவற்றை இணைத்து சுருக்கிக்கொண்டுள்ளன. அவற்றை விரிவாக ஒவ்வொன்றையும் விரிவாக்கிக்கொண்டே சென்றால் சூட்சுமங் களாக அதிலுள்ள விவரங்கள் நமக்கு தெரியவரும். இவ்வாறு ஒவ்வொரு தகவலையும் நாம் எடுக்கலாம். இதில் சாயா கிரகங்கள் என்பன வக்ர கதியில் வலம் வருவதால் சில விஷயங்கள் நெருங்கி வந்து தவறி போய் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சாயா கிரகங்களின் வழியே எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றனவோ அதற்கான நன்மை, தீமைகளை ஒவ்வொரு ஜாதகரும் கடந்து செல்ல வேண்டும். இந்த சாயா கிரகங்களின் சூட்சுமங்கள் என்ன? எவ்வாறு இந்த கிரகங்களுக்கு பலன்கள் உண்டு? நாம் எப்படி கடந்து போகின்றோம் என்பதை புரிந்துகொள்வதே ஜோதிடத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு சூட்சும வழியாகும்.
சாயா கிரகங்கள் என்ன செய்யும்?
பொதுவாகவே சாயா கிரகங்களை முன்னோர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆம், ராகுவை தந்தை வழி முன்னோர்கள் என்றும் கேதுவை தாய்வழி முன்னோர்கள் என்றும் குறிப்பிடுகின்றன. இவர்கள் ஒவ்வொரு கர்மவினைகளையும் தங்களுக்குள் பதித்து வைத்துக் கொள்வர். இந்த கர்மவினைகளை சனி சந்திக்கும் பட்சத்தில் சனியுடன் ஒப்படைக்கப்பட்டு அந்த சனி பகவானின் ஆட்சிக்கு நாம் உட்படும் பொழுது அதற்கான விஷயங்கள், பலன்கள் நிகழும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
சாயா கிரகங்களின் காலம் எது?
எல்லா கிரகங்களுக்கும் நாட்கள் உள்ளன. ஆனால், சாயா கிரகங்களுக்கு நாட்கள் ஒதுக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு குறிப்பிட்ட மணிநேரத்தை இந்த கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டு வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதன்படியே ஒவ்வொரு நாளின் ராகுகாலம் என்பது சாயா கிரகங்களின் காலமாகும். நீங்கள் அந்த தேவதைகளை வழிபடுவதற்கும். அந்தத் தருணத்தில் பக்தியுடன் இருப்பதற்கும் ஏற்ற காலமாகும்.
கிரகங்களின் மேல் சாயா கிரகங்கள் கடக்கும் பொழுது என்ன நிகழும்?
ஆத்மகாரகனாகிய சூரியன், சந்திரன் மேல் ஒரே சமயத்தில் சாயா கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சாயா கிரகங்கள் ஒளிக்கிரகங்களையே தடுக்கும் சக்தியை பெற்றவையாக உள்ளன. அச்சமயம் மந்திர வழிபாட்டை தவிர எந்தவொரு செயலையும் செய்யாமல் இருப்பது நன்மை தரும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. சூரியன் மீது மட்டும் சாயா கிரகங்கள் செல்லும் பொழுது சூரியனின் சக்தியானது சிதறடிக்கப்பட்டு வலிமையை இழக்கிறது. அரசு தொடர்பான விஷயங்கள், தந்தை தொடர்பான விஷயங்களை இந்தக் காலத்தில் தவிர்த்தல் நலம் பயக்கும். சந்திரன்மீது மட்டும் சாயா கிரகங்கள் செல்லும் பொழுது சந்திரனின் சக்தியானது வலிமையை இழந்துபோகின்றது. அச்சமயம் ஜாதகருக்கு தேமல், படை, சொறி போன்ற உபாதைகளை தருகின்றன. சிலருக்கு விஷ ஜந்துகள் தீண்டுதல் போன்ற பிரச்னைகளை செய்கின்றன. கல்வியில் சிலருக்கு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
செவ்வாய் மீது மட்டும் சாயா கிரகங்கள் பயணிக்கும்பொழுது சிலர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு ரத்ததானம் செய்யும் என்ணம் இருந்தாலும் செய்ய முடியாத அமைப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் சில பிரச்னைகளை சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். புதன்மீது மட்டும் சாயா கிரகங்கள் பயணிக்கும் பொழுது படிப்பில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கக்கூடிய அமைப்பும் சிலருக்கு படிக்க முடியாமல் தடங்கல்களும் உண்டாகும்.
சிலர் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவார்கள். சிலர் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை சொல்வதில் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிச்சயம் உண்டு. வியாழன் மீது மட்டும் சாயா கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் பொருளாதாரம் சிலருக்கு அதிகமாக வருவதும் சிலருக்கு பொருளாதார மந்த நிலைகள் ஏற்படுவதும் உண்டு. ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் குறைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. பிறப்பு ஜாதகத்தில் இந்த கிரக இணைவுகளை சண்டாள யோகம் என்று சொல்லப்படுகிறது. சுக்கிரன் மீது சாயா கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் பொருளாதாரம் சிலருக்கு உயர்வதுண்டு. சிலருக்கு ேவறு சில பிரச்னைகளும் உண்டு. இக்கால கட்டத்தில் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்.
சனி மீது சாயா கிரகங்கள் பயணிக்கும் காலத்தில் சில வீடுகளில் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு பாதிப்புகள் உண்டாகும். இத்தருணங்களில்தான் ஒவ்ெவாரு ஜாதகரின் கர்மாக்களும் சாயா கிரகங்களின் வழியே சனியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆகவே, இக்காலக் கட்டத்தில் கவனம் தேவை.
சாயா கிரகங்களுக்கான பொதுவான பரிகாரம்
எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய கிழமையில், ராகு காலத்தில், மூன்று நதிகள் அல்லது இரண்டு நதிகள் இணைந்திருக்கும் கரையோரத்தில் ராகு மற்றும் கேது பரிகாரங்கள் செய்து கொள்வதே சிறப்பான அமைப்பாகும். கர்மத்தை குறைப்பவன் கேது, கர்மத்தை வளர்ப்பவன் ராகு. இவையெல்லாம் பேராசையின் விளைவுகள் என்றால் மிகையில்லை. சாயா கிரக தோஷம் இருப்பவர்கள் சிறு வயதில் பரிகாரம் செய்வதால் சுபகாரியங்கள் நடப்பதற்கான வழிகள் உண்டாகும்.
