28.3.2026 – சனிக்கிழமை முனையாடுவார் குருபூஜை
தமிழ்நாட்டில் உள்ள திருநீடூர் (இன்றைய தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகில்) பகுதியில் பிறந்தார். வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் சிறு வயதிலிருந்தே சிவ பெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிறந்த போர் வீரர். அவர் போரில் சென்று வீரராகப் போராடி சம்பாதித்த பணத்தை தனக்காக வைத்துக் கொள்ளவில்லை. சிவபெருமானின் அடியார்களுக்கு உணவு அளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தினார். எப்போதெல்லாம் சிவபக்தர்கள் அவரது வீட்டிற்கு வந்தாலும், அவர்களை மிகுந்த அன்புடன் வரவேற்று உணவு அளிப்பார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவார். அவர்களை சிவபெருமானின் ரூபமாகவே கருதி சேவை செய்வார். இதற்காக அவர் அடிக்கடி போரில் சென்று சம்பாதித்து வந்தார்.
“முனையில் (போரில்) ஆடுபவர்” என்பதால் அவருக்கு முனையாடுவார் என்ற பெயர் வந்தது. ஒரு நாள் அவரது பக்தியையும் மனநிறைவையும் பார்த்த சிவபெருமான் அவருக்கு அருள் புரிந்து, இறுதியில் அவரை தன்னுடைய திருவடிக்குச் சேர்த்தார். இதனால் முனையாடுவார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக சிவபக்தர்களால் போற்றப்படுகிறார். அவர் குரு பூஜை இன்று.
28.3.2026 – சனிக்கிழமை தர்மராஜா தசமி
ஒரு காலத்தில் பூமியில் ஒரு அரசன் இருந்தான். அவன் நீதியுடன் ஆட்சி செய்தாலும், மக்களில் சிலர் பாவச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மரணித்த பிறகு, அவர்களின் பாவங்களுக்காக எமதர்மராஜாவின் உலகிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த நேரத்தில், மனிதர்கள் தங்கள் பாவங்களைக் குறைத்து நல்ல வாழ்க்கை வாழ ஒரு வழியைக் கேட்டார்கள். அதற்காக எமதர்மராஜா ஒரு விரதத்தை அறிவித்தார். பங்குனி வளர்பிறை தசமி விரதம் தான் அது. சாந்த்ரமான முறையில் சைத்ர சுக்லபட்ச தசமி என்பார்கள்.அந்த நாளில் தர்மத்தின் கடவுள் எனக் கருதப்படும் எமதர்மராஜாவை நினைத்து பூஜை செய்வதால் இதற்கு தர்மராஜா தசமி என்று பெயர் வந்தது. இந்த நாளில் காலையில் விரதமிருந்து குளித்து சுத்தமாக எம தர்மராஜாவை மனதில் நினைத்து பூஜை செய்வார்கள்.தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னதானம், ஏழைகளுக்கு உதவி செய்வது சிறப்பு.
28.3.2026 – சனிக்கிழமை சீர்காழி ஞானப்பால் உற்சவம்
தேவாரப்பாடல் பெற்ற சீர்காழி தலத்தில் தான் ஞான சம்பந்தர் அவதரித்தார். இத்தலத்தில் சுவாமி பிரம்ம புரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என லிங்கம், குரு, சங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சீர்காழியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவரின் பெயர் சிவபாத இருதயர் அவருடைய குழந்தையே பின்னர் திருஞான சம்பந்தர் ஆனார். ஒரு நாள் தந்தை, மூன்று வயது சிறுவனைத் தன்னுடன் கொண்டு கோவிலுக்குச் சென்றார். கோவிலின் புனிதக் குளத்தில் குளிக்க தந்தை சென்றார். சிறு சம்பந்தர் குளத்தின் கரையில் தனியாக இருந்தார். தந்தை குளிக்கச் சென்றபோது குழந்தை தனியாக இருந்ததால் பயந்து அழத் தொடங்கியது. அப்போது அந்தக் குழந்தையின் அழுகையை கேட்டுக் கருணை கொண்டு,இறைவனும் இறைவியும் காட்சி அளித்தனர். பார்வதி தேவியார் தங்கக் கிண்ணத்தில் பாலை எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தைக்கு குடிக்க வைத்தார். அது சாதாரண பால் அல்ல.அது ஞானம் தரும் தெய்வீக பால்.அந்தப் பாலை குடித்த உடனே குழந்தைக்கு சிவஞானம் கிடைத்தது.அந்த நேரத்தில் தந்தை குளித்து வந்து குழந்தையின் வாயில் பால் தடவியிருப்பதைப் பார்த்தார்.“உனக்கு பால் யார் கொடுத்தது?” என்று கேட்டார்.
அப்போது சிறுவன் கை காட்டி சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியைக் காட்டி, தனது முதல் தேவாரப் பாடலைப் பாடினான்:
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
இதுவே திருஞானசம்பந்தரின் முதல் தேவாரப் பாடல். இப்பாடல் பிறந்த நிகழ்வு ஒரு உற்வமாகக் (திருமுலைப்பால் உற்சவம்) கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் உற்சவம் (ஞானப்பால் விழா), திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஞானப்பால் வழங்கிய நிகழ்வை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பெருவிழாவில், சிவபெருமான் சம்பந்தருக்கு ஞானப்பால் புகட்டும் காட்சி, தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சிறப்பாக நடைபெறும்.
1.4.2026 புதன்கிழமை திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்
திருவரங்கத்து அமுதனார் திருவரங்கக் கோயிலின் புரோகி தராகவும் தர்ம கர்த்தாவாகவும் இருந்தவர். புரோகிதம் என்பது கோயிலில் பஞ்சாங்கம் புராணம் வாசித்தல் வேத விண்ணப்பம் செய்தல். திருவரங்கத்தின் கோயில் சாவி அவரிடம் தான் இருந்தது. அவர் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடராகி ராமானுஜரின் மீது ராமானுஜ நூற்றந்தாதி எனும் மிகச் சிறந்த நூலை இயற்றினார். அது மேலோட்டமாக பார்த்தால் ராமானுஜரின் புகழ் பாடுவதாக இருந்தாலும், ஆழ்வார்களின் புகழையும், அவர்கள் அருளிய அருளிச்செயலின் புகழையும், வைணவ தத்துவங் களையும் உள்ளடக்கிய நூல் என்பதால், அதை ஆழ்வார்களின் நூலோடு சேர்ந்து வைணவர்கள் கோயில்களில் முறையாக ஓதுவார்கள். அப்படிப்பட்ட திருவரங்கத்து அமுதனாரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாதம் அஸ்த நட்சத்திரம். அதாவது இன்று. திருமால் ஆலயங்களிலும் வைணவர்கள் வீடுகளிலும் இந்த நட்சத்திர வைபவத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
2.4.2026 – வியாழக்கிழமை திருப்பரங்குன்றம் மயில் வாகன சூரசம்ஹாரம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா பத்தாம் நாள் தங்க மயில் வாகன புறப்பாடு மற்றும் சூரசம்ஹார லீலை நடைபெறும். முருகப் பெருமான் தங்கம் மயில் வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் வைபவமாக சிறப்பாக நடைபெறும்.
3.4.2026 – வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம்
சூரசம்ஹாரத்திற்குப் பிறகு, முருகப்பெருமான் அரசராக முடிசூடிக் கொள்ளும் நிகழ்வு முக்கியமாக நடைபெறும். பட்டாபிஷேகத் தன்று சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெறும். முருகப்பெருமான் தெய்வானையுடன் இணைந்து செங்கோல் ஏந்தி பட்டாபிஷேகக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
