திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு சேலத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிப்பதா?: தவெக தொண்டர்கள் சாலை மறியல்

சென்னை: தமிழகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவரை விஜய் அறிவித்தார். அவர் சேலம் பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வெளியூர் வேட்பாளரை அறிவித்ததை அறிந்த திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தவெக தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நேற்று மாலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வெளியூர் வேட்பாளரை அறிவிக்கப்பட்டதை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அருண்குமார் என்பவரை அறிவித்தார். அவர் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பலர் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், சேலம் பகுதியை சேர்ந்த வெளியூர் வேட்பாளரை அறிவித்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும். அதற்கு பதிலாக உள்ளூர் பகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏனென்றால் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தலைமைக் கழகம் மறுபரிசீலனை செய்து வேட்பாளரை மாற்றிக் கொடுக்க வேண்டும்.

வேட்பாளரை மாற்றவில்லை என்றால் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் ராஜினாமா செய்து எங்களது உறுப்பினர் அடையாள அட்டையை தலைமை கழகத்தில் ஒப்படைத்து கட்சியை விட்டு விலகி விடுவோம். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு இந்த தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கவில்லை என்றால், யாரும் தேர்தல் பணி செய்ய மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: