ஜெவின் கொள்கைக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக எடப்பாடி பழனிசாமி அதிகரிக்கிறார்: ஜி.ராமகிருஷ்ணன் ஆவேசம்

ஆவடி: ஜெவின் கொள்கைக்கு எதிராக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக எடப்பாடி பழனிச்சாமி அதிகரித்து வருகிறார் என ஆவடியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். ஆவடி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘‘மக்கள் கோரிக்கை மாநாடு’’ ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் ஆர்.ராஜன்  தலைமை தாங்கினார். முன்னதாக தொகுதிக்குழு உறுப்பினர் ஏ.ஜான் வரவேற்றார்.

கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: காஸ் விலை உயர்வை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்திய விவசாயிகளையும், விவசாய சந்தைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகுவைக்கும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கம் வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக -அதிமுக கூட்டணியை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து போட்டியிடும். ஜெயலலிதா கூறியதற்கு, எதிராக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக எடப்பாடி பழனிச்சாமி விரிவாக்கம் செய்து வருகிறார். இதனால், தமிழகம் பல்வேறு சமூக பிரச்னைகளில் சிக்கித்தவிக்கிறது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: