×

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம்

 

பழநி, மார்ச் 29: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இதன்படி வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது.  பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடந்த முகாமில் வாக்குச்சாவடி தேர்தல் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் 01, 02, 03 பிரிவுகளில் பணிபுரிய உள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சுமார் 1800 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

இப்பயிற்சியில் வாக்குச்சாவடிக்கு முன்னதாக செல்லும் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு வாக்கு இயந்திரத்தை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்கு இயந்திரம் இணைக்கும் முறை, முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் வாக்களித்து காண்பிப்பது, முகவர்களுக்கான அடையாள அட்டை சரிபார்த்தல், ஆண், பெண் வரிசை தீர்மானித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலர் 1 பிரிவு அதிகாரிக்கு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் புகைப்படத்தை சரிபார்க்கும் பணி குறித்து செயல்முறை விளக்கம் தரப்பட்டு மண்டல தேர்தல் அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு அலுவலர் 2 பிரிவு அதிகாரிக்கு மை வைத்தல், ஒப்புகை சீட்டு வழங்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அலுவலர் 3 பிரிவு அதிகாரிக்கு கன்ட்ரோல் யூனிட் இயந்திரத்தை இயக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பழநி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், தாசில்தார் சக்திவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து மீண்டும் 2 கட்டங்களாக பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இதில் இறுதிகட்ட பயிற்சி முகாம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி உள்ள மாற்று அலுவலகத்தில் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

*திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களான 01, 02 மற்றும் 03 ஆகியோருக்கு தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து திண்டுக்கல் உதவி ஆட்சியர் பயிற்சி வினோதினி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் மற்றும் தேர்தல் விதி குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் திண்டுக்கல் தொகுதியில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் 1,827 பேர் கலந்து கொண்டனர்.

*ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பினை கலெக்டர் சரவணன் நேரில் ஆய்வு செய்த பின் கூறியதாவது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குப்பதிவு மையத்தின் பணியாற்றும் அலுவலருக்கான முதல்கட்ட பயிற்சியில் தபால் வாக்கினை பதிவு செய்வது,

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான வாக்கினை பதிவு செய்வது, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு, வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி உள்ளிட்டவற்றை எவ்வாறு கையாள்வது, வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையத்தின் தேவையான உபகரணங்கள், பயன்படுத்தப்படும் படிவங்கள் மற்றும் பதிவேடுகள் குறித்து செயல்விளக்கம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சஞ்சய் காந்தி, நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, வருவாய் ஆய்வாளர் பூர்ணிமா கிராம நிர்வாக அலுவலர் சிவராஜன், உதவியாளர்கள் விஜயபாஸ்கர், பைசல் முகமது உள்ப பலர் உடனிருந்தனர்.

 

Tags : Dindigul ,Ottansatram ,Palaniil ,PALANI ,TAMIL NAGAR ,Election Commission ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்