×

பொது மக்கள் வாக்களித்த முடிந்த பிறகு மின்னணு இயந்திரங்களை எப்படி சீல் வைப்பது பயிற்சி முகாமில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு விளக்கம்

 

மன்னார்குடி,மார்ச் 29: தமிழ்நாட்டில் 17வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் மும்மூரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,31,935 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 307 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 31 மண்டல அலுவலர்களும், தேர்தல் பணிகளுக்காக 1867 பேர்களும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மன்னார்குடி ராஜகோபால் சுவாமி அரசுக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் மோகனச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பயிற்சி வகுப்பில், மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டு, தேர்தல் ஆணையை பெற்று கொண்ட பிறகு வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளும் முறை, இயந்திரங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை கையாளுதல், மாதிரி வாக்குப்பதிவை நடத்துதல், வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு சீல் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டு பெறுவதற்கான விண்ணப்பம் பார்ம் 12, 12ஏ விநியோகிக்கப்பட்டது.

அவற்றை அலுவலர்கள் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 11ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் யோகேஸ்வரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நக்கீரன், மகேஷ்குமார், துணை வட்டாட்சியர் (தேர்தல்) ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

Tags : Mannargudi ,Election Commission ,17th Assembly elections ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...