×

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆழித்தேர்

 

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேர் நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4 அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேர் 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ஆரூரா தியாகேசா என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக அருள்பாளிக்கிறார். 9 நவகிரகங்களும் தியாகராஜரின் விழிக்கு கட்டுப்பட்டு ஒரே நேர்கோட்டில் தென்திசை மற்றும் தியாகராஜசுவாமி சன்னதி நோக்கி இருக்கும் வகையில் அமையபெற்றுள்ளது. 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 மிகப்பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தகிணறுகள், 3 நத்தவனங்கள், 3 மிகப்பெரிய பிரகாரம், 365 லிங்கங்கள் கொண்ட இக்கோயிலில் உற்சவரான தியாகராஜருக்கு அடுத்தபடியாக கமலாம்பாள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சன்னதிகள் இருந்து வருகின்றன.

தியாகராஜருக்கு உகந்த ஆயில்ய நட்சத்திரம்:
திருவாரூர் ஆழித்தேர் என்பது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேரோகும். ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்த இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 1927ம் ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தேர் முற்றிலுமாக எரிந்தது. பின்னர் 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 வரையில் நடைபெற்ற நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேரோட்டம் என்பது முற்றிலுமாக தடைப்பட்டது. அதன்பின்னர் வடபாதிமங்கலம் தியாகராஜமுதலியார் பெரும் முயற்சி காரணமாக 1970ல் முதல்வர் பொறுப்பேற்ற மறைந்த கருணாநிதி 22 ஆண்டு காலமாக ஓடாத தேரை ஓட்டி காண்பித்தார்.

பின்னர் தொடர்ந்து இந்த தேரோட்டமானது நடைபெற்றாலும் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 1990, 91 மற்றும் 1993ம் ஆண்டுகளில் இதுபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், 28 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த ஆழித்தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடதக்கது. இதன்படி இன்று பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது.

 

Tags : Thiruvarur Thyagarajaswamy Temple ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...