பெரம்பலூர்,மார்ச் 29: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் மதுரை கோபாலசாமி கோயில் தேரோட்டம் தொடங்கியவுடன் எங்கும் நிறுத்தாமல் அனைத்து வீதிகளுக்கும் சென்று மாலை 5 மணிக்குள் நிலைநிறுத்தம் செய்ய பொதுமக்கள் பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் தெப்பக்குளம் கிழக்கே அமைந்துள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 23ம் தேதி தொட ங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பங்குனி உத்திரப் பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி பெரம்பலூர் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகி அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தலின் பேரில், வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கி திருத் தேரோட்டம் எந்த இடத்திலும் நிறுத்தாமல், மாலை 5 மணிக்குள் திருத்தர் நிலை நிறுத்தம் செய்வதற்கு ஏதுவாக, பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசாமி கோயில் பக்தர்கள் மற்றும் பெரம்பலூர் நகர பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
