×

திருவாரூர் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி

 

திருவாரூர், மார்ச் 29: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா இன்று (29ம்தேதி) நடைபெறுவதையொட்டி நேற்றிரவு தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டமானது நடப்பாண்டில் இன்று (29ந் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தியாகராஜர் தனக்கே உரிய அஜபா நடனத்துடன் கோயிலின் சன்னதியிலிருந்து புறப்பட்டு விட்ட வாசல் வழியாக நேற்றிரவு ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியானது நடைபெற்று ஆழித்தேரில் தியாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜரை வழிப்பட்டனர்.

மேலும் இன்று காலையும் ஆழித்தேரில் தியாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று காலை 9.5 மணியளவில் ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முன்னதாக காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும், ஆழித்தேருக்கு பின்னால் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறைக்கட்டளை பரம்பரை அறங்காவளர் ராம்தியாகராஜன், உதவி ஆணையர் ராஜாஇளம்பெருவழுதி, செயல் அலுவலர் கவியரசு மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruvarur ,Thiragarh Adhi Thertra ,Thiragarh Swamy Temple ,Saiva ,Samayam ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...