×

மாவட்டத்தின் 6 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி போட்டி

 

மதுரை, மார்ச் 29: மதுரை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் திமுக சார்பில் 3 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் சேடபட்டி மணிமாறன், திருப்பரங்குன்றம் கிருத்திகா தங்கப்பாண்டி, மதுரை மேற்கு ரகுபாலாஜி, மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு கோ.தளபதி எம்எல்ஏ, சோழவந்தான் (தனி) வெங்கடேசன் எம்எல்ஏ, மதுரை கிழக்கு அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 7ல் திமுக வேட்பாளர்களும், மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதன்மூலம் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதேபோல், அதிமுக சார்பில் மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, திருமங்கலம் உதயகுமார், திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா, மதுரை வடக்கு டாக்டர் சரவணன், மதுரை கிழக்கு மாங்குளம் கே.மகேந்திரன், சோழவந்தான் (தனி) மாணிக்கம், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன், மேலூர் பெரியபுள்ளான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி) ஆகிய ஆறு தொகுதிகளில், திமுகவும், அதிமுகவும் நேரடியாக களத்தில் எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக மற்றும் அதிமுகவின் சின்னங்களில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் களம் காண்கின்றனர்.

 

Tags : DMK-AIADMK ,Madurai ,DMK ,AIADMK ,Madurai district ,Thirumangalam… ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்