×

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் நிலை அலுவலர்கள் உள்பட 14,780 பேருக்கு பயிற்சி: தொகுதி வாரியாக நடைபெற்றது

 

மதுரை, மார்ச் 29: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை-1 , நிலை-2 , நிலை-3 ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். மேலூர் தொகுதிக்கு மில்டன் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை கிழக்கு தொகுதிக்கு யாதவா மகளிர் கல்லூரியிலும், சோழவந்தான் தொகுதிக்கு வடிப்பட்டி தாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியிலும், மதுரை வடக்கு தொகுதிக்கு நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை தெற்கு தொகுதிக்கு நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இதேபோல் மதுரை மத்திய தொகுதிக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஹோலி பேமிலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளில் 10 தொகுதிகளிலும் சேர்த்து தலா 3695 வாக்குசாவடி நிலை அலுவலர்கள், நிலை-1, நிலை-2, மற்றும் நிலை-3 பிரிவுகளில் வாக்குப்பதிவு அலுவலர்கள் என 14,780 பேர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு வாக்குப்பதிவு நடைமுறை, இவிஎம் மற்றும் விவிபேட் கருவிகளின் பயன்பாடு, வாக்குச்சாவடி மேலாண்மை, மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டியில் நடந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரவீன்குமார் பார்வையிட்டார். உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ் குமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி உள்ளிட்ட பலர் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

 

Tags : Madurai ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்