10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12 ஆயிரம் பேர் ஆப்செண்ட்: பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வில் நேற்று 12 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடந்த கணக்கு தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து மொத்தம் 9 லட்சத்து 569 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர், தனித் தேர்வர்கள் 17 ஆயிரத்து 763 பேர். இந்நிலையில் நேற்றைய தேர்வில் பள்ளி மாணவர்கள் 11 ஆயிரத்து 284 பேரும், தனித் தேர்வர்கள் 1524 பேரும் பங்கேற்கவில்லை. நேற்று நடந்த கணக்கு பாட தேர்வில் திருப்பத்தூர் 1, கடலூர் 1 என இரண்டு பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பறக்கும் படையிடம் சிக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறைக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வில் அறிவியல், சமூக அறிவியல், மற்றும் விருப்ப மொழிப்பாட தேர்வுகள் என இன்றும் 3 தேர்வுகள் நடக்க இருக்கின்ற நிலையில், ஏப்ரல் 6ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. அதேபோல, பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் (26ம் தேதி) முடிகின்றன. இன்றைய தேர்வில் தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு மற்றும் நெறியியல், கணினி அறிவில், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின்பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு நாளையுடன் (27ம் தேதி) முடிகிறது.

Related Stories: