மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கீழக்கரையில் ‘போதை ஐஸ்’ விற்பனை எதிர்கால தலைமுறை சீரழியும் அபாயம்

கீழக்கரை, பிப்.17: கீழக்கரையில் ஐஸ் எனப்படும் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  கீழக்கரையில் சில சமூக விரோதிகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை வெளியூரிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதற்காக உள்ளூரிலும் சில ஏஜெண்ட்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும், கடுமையான தண்டனைகளை வழங்கி வந்தாலும், சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையையும், ஊடுருவலையும் தடுக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், பின்னணியில் இருக்கும் போதைப்பொருள் பிரமுகர்கள் என்று கூறப்படுகிறது கீழக்கரையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக, சமீப காலமாக ‘ஐஸ்’ எனப்படும் ஒரு வகை போதை பொருள் புழக்கம் வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் கீழக்கரையில் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கீழக்கரை அருகே தோட்டங்களில் ஐஸ் எனப்படும் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. சிறுவர்கள் போதை பொருட்களின் விளைவுகளை தெரியாமல் அதை வாங்கி சென்று பொழுதுபோக்காக பயன்படுத்துகின்றனர். சில பெட்டி கடைகளிலும் போதை பொருட்களின் விற்பனை நடைபெறுகிறது. இங்கு இரவு நேரங்களில் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. ஆசை வார்த்தை கூறி சட்டவிரோதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை போதை பொருள் விற்பனையில் சமூக விரோதிகள் ஈடுபட வைக்கின்றனர். பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வியாபாரம் செய்யும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை எந்நேரமும் போதையில் வைத்துள்ளனர். மாணவர்களை குறிவைத்து நடக்கும் போதை பொருள் விற்பனையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்க உடனடியாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: