போரால் ஏற்படும் பாதிப்புகளை இயன்ற அளவு அரசு குறைத்து வருகிறது: மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்

 

டெல்லி: போரால் ஏற்படும் பாதிப்புகளை இயன்ற அளவு அரசு குறைத்து வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். கடந்த சில நாட்களாக மேற்க ஆசிய பகுதியில் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் சவாலை சந்தித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் உரம் இறக்குமதியில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேளாண்மை, எரிசக்தி, ஏற்றுமதி மற்றும் சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டிய நீண்டகால திட்டம் குறித்து ஒன்றிய அமைச்சரவை செயலாளர் ஏற்கனவே விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அப்போது; மேற்காசிய போரால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிக்கப்பட்டுள்ளது. போரால் மக்களின் வாழ்க்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசிய சூழலை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது. மேற்கு ஆசியாவிலிருந்தே நமது கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பல சிக்கல்களுக்கு இடையே எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறோம். வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் தொடங்கியபிறகு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் குறித்து பேசியுள்ளேன்.

போருக்கு பிறகு இதுவரை 3.75 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்; ஈரானில் இருந்து 1,000 பேர் தாயகம் திரும்பினர். இந்தியர்கள் வசித்துவரும் நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளேன். பணிக்காகவும், சுற்றுலாவாகவும் சென்ற இந்தியர்களுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டது. இந்தியாவில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. பெட்ரோலுடன் தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது. ரயில்களை மின்சாரம் மூலம் இயக்குவதால் டீசல் பயன்பாடு குறைந்துள்ளது; மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போரால் ஏற்படும் தாக்கங்களை ஒன்றிய அமைச்சர்கள் குழு கண்காணித்து வருகிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்ய தூதரகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒன்றிய அமைச்சர்கள் குழு தரும் பரிந்துரைக்கு ஏற்ப தினமும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. போர் சூழலில் வெளிநாடுகளில் வசிகும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போரால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு இயன்றவரை முயற்சித்து வருகிறது. மேற்கு ஆசியாவில் இந்திய மாணவர்களின் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் சாகுபடி காலத்துக்கான உரம் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட நானோ உரங்கள் விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளன. மேற்கு ஆசியா எரிபொருள் கொள்முதலில் முக்கிய இடம் பெறுகிறது; பொருளாதாரத்தின் முதுகெலும்பு எரிபொருள். தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்தியாவின் வருங்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த முயற்சிகளின் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை கடந்து கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணை வழித்தட சிக்கலால் கடும் சிரமத்திற்கு இடையில் கச்சா எண்ணை இறக்குமதி செய்து வருகிறோம். 53 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமான எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் உள்ளது

எரிபொருள் பயன்பாட்டுக்கான எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதால் பாதிப்பு இல்லை; விவசாயம் பாதிக்கப்படாது. அணுமின் உற்பத்தி, சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போரால் ஏற்படும் பாதிப்புகளை இயன்ற அளவு அரசு குறைத்து வருகிறது என்று கூறினார்.

Related Stories: