புதுடெல்லி: குஜராத் முதல்வராகவும், பிரதமராகவும் 8,931 நாட்கள் தலைமை பதவி வகித்து இந்தியாவின் நீண்டகால தலைவராக பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். அவருக்கு அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களும், பாஜ மூத்த தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்ற பிரதமர் மோடி 2014 வரையிலும் 12 ஆண்டுகள் 227 நாட்கள் அப்பதவியை வகித்தார். இதில் தொடர்ந்து 4 முறை அவர் முதல்வராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதும் முதல் முறையாக பிரதமர் ஆனார். அதன்பின் பிரதமர் மோடி தலைமையில் 2019, 2024 மக்களவை தேர்தல்களில் பாஜ ஆட்சியை பிடித்தது. இதன் மூலம், தற்போது வரை 8,931 நாட்கள் பதவி வகித்து வரும் அவர், இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை மோடி முறியடித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு ஒன்றிய அமைச்சர்கள், பாஜ மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது எக்ஸ் பதிவில், ‘‘குஜராத் முதல்வராக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்து பிரதமராக அவரது அர்ப்பணிப்புள்ள தலைமை வரை அவரது வாழ்க்கை தொடர்ச்சியான சேவைப் பயணமாக இருந்துள்ளது. நாட்டின் தலைவராக 8,931 நாட்கள் தலைமை பதவியில் இருந்த இந்த தருணம், தேசத்திற்கு முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை, மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராது சேவை செய்வதில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது’’ என்றார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பல தசாப்த கால சேவை ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவது, வளர்ச்சியில் புதிய மைல்கற்கள் அமைப்பு, உலகளாவிய தளங்களில் தேசத்தின் பெருமையை உயர்த்துவது என எதுவாக இருந்தாலும், மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றியுள்ளது’’ என புகழ்ந்துள்ளார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
