வேலாயுதம்பாளையம், மார்ச் 23: தேர்தல் நெருங்கும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்ர பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகனங்களில் பிரச்சாரம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடங்களை போலீசார் தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நொய்யல் குறுக்குசாலை அரசுடமையாக்கப்பட்ட வங்கி முன்பாகவும், புகளூர் நகராட்சி மலை வீதி ரவுண்டானா பகுதி, புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் தளவாவாபாளையம் மாரியம்மன் கோயில் அருகிலும், புன்னம் சத்திரம்- காகித ஆலை செல்லும் சாலை ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகிலும் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் மற்ற பகுதிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
