திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவன்ஷின் பிறந்தநாளையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவருடன் மனைவி புவனேஸ்வரி, அமைச்சரும், மகனுமான நாரா லோகேஷ், அவரது மனைவி நாரா பிராமணி மற்றும் பேரன் தேவன்ஷ் ஆகியோரும் வந்தனர். அனைவரும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்களுடன் சென்று ஏழுமலையானை வழிபட்டனர். பின்னர் குடும்பத்தினருடன் இணைந்து மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான பிரசாத வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் பரிமாறி அங்கேயே அன்னதானம் சாப்பிட்டனர்.
இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தானம் மற்றும் மாநில உணவு பாதுகாப்பு துறை இணைந்து ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட உணவு பொருட்கள் ஆய்வகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதத்தில் எந்தவித கலப்படம் இல்லாமல் தரமான, சுவையான பிரசாதங்கள் தயாரித்து உறுதி செய்ய இந்த ஆய்வகம் இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.
