வைகுண்டம், பிப்.16: வைகுண்டம் பேரூராட்சி பகுதியில் உள்ள 18-வார்டு பகுதிகளிலிருந்தும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 30 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுத்திடும் வகையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2017ம் ஆண்டு வைகுண்டம் அருகே உள்ள நத்தம் பகுதியில் வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் கொட்டப்பட்டன.அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஓராண்டிற்குள் வளர்ப்பு பூங்கா எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மீண்டும் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் 18-வார்டு பகுதிகளிலிருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.மேலும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் பல்வேறு சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுகிறது. காற்றடிக்கும் திசை எங்கும் பரவும் புகையினால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புகை சென்று அங்கு உள்ள நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொது மக்களின் உயிரோடு விளையாடும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட தயாராகி வருகின்றனர்.