அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்; காஸ் சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை: கலெக்டர்களுக்கு அதிகாரமளித்து ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தை சீராக்க ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியா போன்ற அதிகப்படியான எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டன.

குறிப்பாக இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதியை நம்பியே உள்ளது. இதில் 90 சதவீத இறக்குமதி இந்த கடல் வழிப்பாதை வழியாகவே நடைபெற்று வந்தது. முந்தைய காலங்களில் ஏற்பட்ட இத்தகைய போக்குவரத்து தடைகளால் உள்நாட்டில் தற்காலிக தட்டுப்பாடும், கறுப்பு சந்தை விற்பனையும் அவ்வப்போது தலைதூக்கின. இந்நிலையில் இன்று, மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய 1955ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்துவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு பதுக்கலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் போக்குவரத்து சிஎன்ஜி பயன்பாட்டிற்கு 100 சதவீத முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாறாக உர ஆலைகளுக்கு 70 சதவீதமும், இதர தொழிற்சாலைகளுக்கு 80 சதவீத எரிவாயு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் கையிருப்பு விபரங்களை உடனுக்குடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறி எரிபொருளை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள சில தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்களின் இயக்கம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: