சர்ச்சையை ஏற்படுத்திய இந்தி பாடல் நீக்கம்; என் அனுமதி பெறாமல் போட்டோவை பயன்படுத்தி விட்டனர்: நடிகை நோரா பதேஹி குற்றச்சாட்டு

மும்பை: பிரேம் இயக்கத்தில் துருவ் சர்ஜா, ரேஷ்மா நானையா, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடித்துள்ள பான் இந்தியா படம், `கேடி: தி டெவில்’. இதில் இடம்பெற்ற ‘சர்கே சுனார் தேரி சர்கே’ என்ற இந்தி பாடல் காட்சியில் சஞ்சய் தத், நோரா பதேஹி இணைந்து ஆடியுள்ளனர். இதில் இடம்பெற்ற ஆபாச இரட்டை அர்த்த வரிகளால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இதை கண்டித்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் பாலியல் ரீதியாக தூண்டும் வகையில் இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

பாடலிலுள்ள நடன அசைவுகளும், காட்சி அமைப்பும் நாகரீகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் உள்பட பலரும் திரைப்பட தணிக்கை குழு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், டெல்லி போலீஸ் சைபர் செல் ஆகியவற்றிடம், இப்பாடலை அனைத்து தளங்களில் இருந்து உடனே தடை செய்ய வலியுறுத்தி புகார் அளித்தனர். இதை தொடர்ந்து இந்தி உள்பட இப்பாடலின் அனைத்து மொழி பதிப்புகளும், அனைத்து தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், தற்போதைய ஆபாச வரிகளை மாற்றிவிட்டு, வேறு வரிகளுடன் இப்பாடலின் புதிய பதிப்பை, மன்னிப்பு அறிக்கையுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டது.

இந்நிலையில், இப்பாடலில் நடனமாடியுள்ள நோரா பதேஹி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘இதை ஆதரிப்பதாக யாரும் நினைப்பதை நான் விரும்பவில்லை. இந்த எதிர்ப்புகளுக்கு மிகவும் நன்றி. இந்த அழுத்தத்தின் காரணமாக, நல்லவேளையாக திரைப்பட தயாரிப்பாளர்கள் அதை நீக்கிவிட்டனர். மேலும், அனைவரும் இப்பாடலை பகிர்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், நீங்கள் தேவையில்லாமல் அதற்கு ஒரு தளத்தை வழங்குகிறீர்கள்.

சிலர் எனது குணநலன்களை தாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்த முயற்சிப்பதை நான் அறிகிறேன். இது துரதிர்ஷ்டவசமானது. எப்படி இருந்தாலும் நானும், எனது குழுவினரும் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் மிகவும் கவனமாக இருப்போம். எனினும், இந்த இந்தி பாடல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன். நான் அதற்கு நடனமாடவில்லை. மேலும், எனது படத்துடன் அதை பயன்படுத்த எந்த அனுமதியும் பெறப்படவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: