புதுடெல்லி: எரிசக்தித் தரவுகளைத் தேசியப் பாதுகாப்பு சார்ந்த விஷயமாக ஒன்றிய அரசு வகைப்படுத்தியுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலி முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களும் விரிவான செயல்பாட்டுத் தகவல்களை வழங்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தகவல் அளித்தல்) ஆணை, 2026-ன் படி, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுத்திகரிப்பாளர்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியாளர்கள், குழாய்வழி இயக்குநர்கள், நகர எரிவாயு விநியோகஸ்தர்கள், பெட்ரோலிய வேதி பொருள் நிறுவனங்கள் நுணுக்கமான தரவுகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். சில சமயங்களில் தினசரி அளித்திட வேண்டும்.
மத்திய கிழக்கில் நடந்த போரினால் எரிவாயு மற்றும் எல்.பி.ஜி விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விநியோகத் தடைகளுக்கு விரைவாக பதிலளிக்கவும், மின்சாரம், உரங்கள் மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி போன்ற முக்கியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், மேலும் தகவலறிந்த கொள்முதல் முடிவுகளை எடுக்கவும் உதவும் வகையில், மையப்பயப்படுத்தப்பட்ட, நிகழ்நேரத் தரவு கட்டமைப்பை உருவாக்குவதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
