புதுடெல்லி: மேற்கு ஆசியா போரில் ராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்ட நிலையில், தற்போது ஈரானிலும், அரபு நாடுகளிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரானும் அமெரிக்க, இஸ்ரேலிய படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலால் மிகவும் பாதிக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், எந்த நாடுகளையும் குறிப்பிடாமல், மேற்கு ஆசியாவில் எண்ணெய், எரிவாயு மையங்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்திர ஊடக சந்திப்பில், ‘‘மேற்கு ஆசியா முழுவதும் எரிசக்தி உட்கட்டமைப்பு உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளை தாக்குவதை தவிர்க்க வேண்டும் என இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது பிராந்தியம் முழுவதும் பல்வேறு இடங்களில் எரிசக்தி ஆலைகள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. ஏற்கனவே நிச்சயமற்ற நிலையில் உள்ள உலகளாவிய எரிசக்தி சூழலை இது மேலும் சீர்குலைக்கச் செய்யும். இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மேலும் அவை நிறுத்தப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.
மேற்கு ஆசியாவின் எண்ணெய், எரிவாயு மையங்கள் மீதான நேற்றைய புதிய தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலராக அதிகரித்துள்ளது.
