புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்களிடம் இருந்த பீதி குறைந்ததால், முன்பதிவுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. ஆனாலும் காஸ் சிலிண்டர் விநியோக நிலைமை தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது. எந்தவொரு எல்பிஜி டீலர்களிடமும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. கிடைக்கக்கூடிய எல்பிஜியை வீட்டு உபயோகங்களுக்கு வழங்குவதற்கே அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு போருக்கு முந்தைய இயல்பான அளவிலான தினசரி எல்பிஜி விநியோகங்களை செய்து வருகின்றன. எங்கள் விநியோகம் குறையவில்லை.
எனவே வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விநியோகம் தடையின்றித் தொடர்கிறது. சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் குழாய்வழி இயற்கை எரிவாயுவுக்கு மாற ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் கடந்த 2 வாரங்களில், 1.25 லட்சம் புதிய வீட்டு, வணிக மற்றும் தொழில்துறை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் கள்ளச்சந்தையைத் தடுப்பதற்கான சோதனைகள் மற்றும் ஆய்வுகள் தொடர்கின்றன. வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்தில் முன்னுரிமை துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
