புதுடெல்லி: எஸ்பிஐ வங்கியிடம் ரூ.2029கோடி வங்கி மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பிஐ புகாரின்படி 2018ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பல்வேறு கடன் வழங்குநர்களுக்கு ரூ.40ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை நிலுவையில் வைத்திருந்தது.
இதில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐக்கு மட்டுமு் ரூ.2925கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக தொழிலதிபர் அனில் அம்பானி நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வருகை தந்தார். வங்கி மூலமாக நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் நிதியில் நிதி திசைதிருப்பல், முறைகேடு மற்றும் பிற விதிமீறல்கள் குறித்து அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகின்றது.
