பராமரிப்பு தனியாருக்கு விட்டதால் தேஜஸ் ரயில் கதவுகள் திறப்பதில் அலட்சியம்

மதுரை, பிப்.16: தேஜஸ் ரயில் பராமரிப்பு தனியாருக்கு விடப்பட்டதால், இந்த ரயில் கதவுகள் திறப்பதில் அலட்சியம் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் அதி விரைவு ரயில்(வ.எண் 02613/02614) மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தானாக திறந்து, மூடும் வசதி கொண்ட கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஓடும் ரயிலில் ஏறி, இறங்கி பயணிகள் உயிர் இழக்கும் அபாயத்தை தடுக்கும் விதமாக இருப்பதால் ரயில் பயணிகளிடம் தானியங்கி கதவு வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு இயக்கப்படும் தேஜஸ் விரைவு வண்டியில் திருச்சி, கொடைரோடு, மதுரை நிறுத்தங்களில் சில பெட்டிகளின் கதவுகள் தானாக திறப்பதில்லை.

இதற்கு மாறாக ரயிலில் பணியில் இருக்கும் ரயில்வே தொழில்நுட்ப தொழிலாளர்கள் சாவி மூலம் கைகளால் திறந்து விடுவது அலட்சியப்போக்கை காட்டுகிறது. இதனால் ரயில் கிளம்ப தாமதம் ஏற்படுகிறது. இது பயணிகளிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ரயில்வேயின் நன்மதிப்புக்கும் குந்தகம் ஏற்படுவதாக பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

டி.ஆர்.இ.யூ கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் கூறும்போது, ‘‘இந்த ரயிலில் தானியங்கி கதவுகளின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்தது தவறு. அவர்கள் பராமரிப்பை சரிவர செய்யாத காரணத்தால் நிறுத்தங்களில் கதவு திறப்பதில் தவறு நிகழ்கிறது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் இந்த விசயத்தில் தலையிட்டு குறையை தீர்க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: