திருக்குளந்தை தர்மத்தின் தந்தை

இறுதிப் பகுதி

“சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்,
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே’’
– எம்பெருமானே நம்மை காப்பாற்ற கூடியவராகத் திகழ்கிறார்.

சிறப்பம்சம்

இந்தக் கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது. தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பொதுவாக திருமாலுக்கு எதிரில் கருடன் காட்சியளிப்பார். இத்தலத்தின் சிறப்பு கருவறையில், உற்சவமூர்த்தி மாயக்கூத்தன் (சோரநாதன்) பெருமாள் குளந்தை வல்லி, அலமேலு மங்கை தாயார்களுடன் பக்கத்திலே கருடாழ்வார் நின்று கரம் கூப்பிய நிலையில் இருப்பார். இத்தகைய காட்சி காண்பது மிகவும் அரிது. மூலவர் வேங்கடவாணன் பெருமாள் மீது வர்ணம் பூசப்பட்டுள்ளது. வேதசாரரும் அவரது மனைவி குமுதவல்லியும் கைகளைக் கூப்பி திருமாலை வணங்குகின்றனர். அருகே பிரகஸ்பதியும் வீற்றிருக்கிறார். வைகாசி மாதத்தில் நடைபெறும் ஒன்பது கருட சேவை இங்கே மிகவும் பிரசித்திப் பெற்றதாக உள்ளது.

பொதுவாக வைணவ கோயில்களில் நவகிரகங்களுக்கு என்று சந்நதி இருக்காது. திருக்குளந்தை மாயக்கூத்தன் கோயிலில் நவகிரகங்களுக்கு என்று தனி சந்நதி உள்ளது. இது தனி சிறப்பாகும். இங்குள்ள பிற நவதிருப்பதி கோயில்களிலும்கூட நவகிரக சந்நதி கிடையாது.

கழனி தொட்டியான்

மடப்பள்ளியில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொட்டியில் தங்கும். அவ்விடத்தில் ஓர் அற்புதமான காட்சியைக் காணலாம். இங்கே எம்பெருமான் ‘கழனி தொட்டியான்’ என்னும் திருநாமத்தோடு காவல் தெய்வமாகக் காட்சி தருகிறார். சிலரின் குலதெய்வம் ஆகவும் விளங்குகின்றார். இவருக்கு தை மாதம் கடை வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகின்றது.

மூலவர்: ஸ்ரீனிவாசன் | வேங்கடவாணன்.
உற்சவர்: மாயக்கூத்தன் | சோரநாதன்.
தாயார்: குளந்தைவல்லி தாயார் | கமலவல்லி தாயார் | அலமேலுமங்கை.
தீர்த்தம்: பெரியகுளம்.
விமானம்: ஆனந்த விமானம்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தடைகள் நீங்கி நன்மை பயக்கும்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, கருட சேவை, ஸ்ரீராமன் நவமி, நரசிம்ம ஜெயந்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை: 7.30 முதல் 12.00 வரை, மாலை: 5.00 முதல் 7.30 வரை.
எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து சுமார் 32 கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடையலாம்.

பொன்முகரியன்

Related Stories: