- தர்மபுரி
- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- சட்டப் பேரவை பொதுத் தேர்தல்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- கலெக்டர்
- சதீஸ்
- தர்மபுரி...
தர்மபுரி, மார்ச் 17: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 7ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 9ம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவும், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. மே 6ம் தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வருகிறது. அரசியல் கட்சிகள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரிடம், உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலி பயன்பாட்டில் உள்ளது. வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பாக இணையதள முகவரி https://suvidha.eci.gov.in-ல் அல்லது இசிஐஎன்இடி செயலி வழியாக சுவிதா செயலியை பயன்படுத்தி விண்ணப்பம் அளித்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், டிஆர்ஓ கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
