சென்னை: அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திறன் படிப்புதவி தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித் தொகை பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தொகை பெறுவதற்கான தேர்வு கடந்த ஜனவரி 10ம் தேதியில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்பட்டது.
இந்ததேர்வில் மாணவ மாணவியர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் பிப்ரவரி 18ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களின் பிறந்த தேதி, இனம் உள்ளிட்ட திருத்தங்கள் இருந்தால் அது குறித்த விவரங்களை தெரிவிக்க கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி பெறப்பட்ட விவரங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தெரிவுப்பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட ஊக்கத் தொகை பெறுவதற்கான தெரிவுப் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.
