சென்னை: நாவலூரில் காஸ் கசிவால் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலை, நாவலூரில் சாமுண்டீஸ்வரி நகர் உள்ளது. இதில் 2வது தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 போர்ஷன்கள் உள்ளன. அதில் ஒரு போர்ஷனில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக தொழில் செய்து வருகிறார். அடுத்த போர்ஷனில் வைரமுத்து என்பவர் தனது மனைவி செல்வி, மகன் பிரதீப் ஆகியோருடன் வசிக்கிறார். அதற்கடுத்த கடைசி போர்ஷனில் சஞ்சீவ் குமார், மனைவி சோனியா, மகள் கிருஷிகா, மகன் தீரன், மாமியார் சித்ரா, மைத்துனி சுதா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்களில் நடு போர்ஷனில் வசித்து வந்த வைரமுத்து என்பவர் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் மேன்சன்களில் தங்கி உள்ளவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதனால் இவரது வீட்டில் ஏராளமான காஸ் சிலிண்டர்களை ஸ்டாக் வைத்து இருப்பார். நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் வைரமுத்து வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு வாசனை வந்ததால் வைரமுத்துவின் மனைவி செல்வி எழுந்து மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் அவர்களின் வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. வைரமுத்துவின் மகன் பிரதீப் உடல் முழுவதும் கருகிய நிலையில் வெளியே ஓடி வந்தான். பக்கத்து போர்ஷனில் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சீவ்குமார் (30), அவரது மனைவி சோனியா (28), மகள் கிருஷிகா (4), தீரன் (ஒன்றரை வயது), மாமியார் சித்ரா (55) ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அதேபோன்று முன் போர்ஷனில் குடியிருந்த முருகனும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்த பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிந்து கிடந்த வீட்டிற்குள் ஓடினர். தகவல் அறிந்து சிறுசேரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைப்பு அலுவலர் சேகர் தலைமையில் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவி அபிராம், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் ஏராளமான போலீசாரும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அங்கு வந்து இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் சிறுவன் பிரதீப் தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தான். மற்றவர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டனர். இதில் உடல் நசுங்கி சஞ்சீவ்குமாரின் மகள் கிருஷிகா (4), ஒன்றரை வயது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன் பிரதீப் உள்ளிட்ட 7 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் படூர் தனியார் மருத்துவமனைக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அதிக தீக்காயம் அடைந்த சிறுவன் பிரதீப், வைரமுத்து, அவரின் மனைவி செல்வி ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து உண்மையிலேயே சிலிண்டர் வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் சம்பவமா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளிக்கரணை இணை ஆணையர் ஜெயந்தி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
* வணிக சிலிண்டர் வந்தது எப்படி?
சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து மூன்று வணிக சிலிண்டர்களும், இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்களும் மீட்கப்பட்டன. வீட்டுக்குள் வணிக சிலிண்டர் வந்தது எப்படி என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இந்த சிலிண்டர்களை வைத்து வைரமுத்து தனது போர்ஷனில் சாப்பாடு சமைத்து தனியார் மேன்சன்களுக்கு சப்ளை செய்து வந்தது கண்டு
* அனுமதியின்றி நடக்கும் விடுதிகள் மற்றும் கேட்டரிங்
ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் அதைச்சார்ந்த நிறுவனங்கள் இருப்பதால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தனியார் மேன்சன்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தங்கி உள்ளனர். இந்த விடுதிகளில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. எந்த துறையின் அனுமதியும் பெறுவதில்லை. அவர்களுக்கான உணவு சப்ளை செய்ய பலரும் தங்களின் வீடுகளில் பெரிய காஸ் அடுப்புகளை வைத்து சமையல் செய்து கொடுத்து வருவாய் ஈட்டுகின்றனர்.
* தூக்கத்திலேயே போன உயிர்கள்
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் 8 மணி வரை தூங்குவர். சம்பவம் சரியாக 7.40 மணிக்கு நடைபெற்றுள்ளது. அதுவும் வீட்டுக்குள் காஸ் கசிவு வாசனையை வைத்து வைரமுத்துவின் மனைவி செல்வி எழுந்து பார்த்துள்ளார். இருட்டில் ஒன்றும் தெரியாததால் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். உடனே சிலிண்டர் வெடித்துள்ளது. பக்கத்து போர்ஷனில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவர் மீதும் சுவர் இடிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே அவர்களது உயிர் பிரிந்தது.
