சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தமிழகத்துக்கு ஏப்ரல் 23ம் தேதியும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
அவற்றின் விவரம் வருமாறு: எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, சாதி, மதம், இனம், மொழி தொடர்பான வேற்றுமைகளை பேசி மக்களிடையே கசப்பு உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொதுவாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி பேசக்கூடாது.
* ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. அவரது வீட்டு முன் பிரசார கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. ஓட்டுக்காக சாதி, மத உணர்வை தூண்டக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் எதுவும், தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப்பொருள் கொடுக்கக்கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக்கூடாது.
* தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது. அந்த நபர் மீது கட்சியினர் யாரும் நடவடிக்கை எடுக்கக்கூடா து. போலீசாரின் உதவியை நாட வேண்டும். ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக்கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும்.
* தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. தேர்தல் பிரசாரத்தின் போது அரசின் உபகர ணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக்கூடாது. அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர், அரசுக்கு சம்பந்தப்பட்ட விமானம் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக்கூடாது. நிதி உதவிகளைப் பற்றி அறிவிப்பு வெளியிடக்கூடாது.
* திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவது, திறந்து வைப்பது ஆகியவற்றை செய்யக்கூடாது. சாலை அமைக்கப்படும், குடிநீர் வசதி செய்து தரப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியினர், அரசின் செலவில் விளம்பரம் வெளியிடவோ, ஊடகங்களில் பிரசாரமோ செய்யக்கூடாது. பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்குதளம், அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
* தேர்தலின் போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக்கூடாது. அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி (2 நாள்) நேரத்திற்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உரிய ஆவணங்கள் இன்றி பெரிய தொகையை எடுத்து செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ரூ.50,000க்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கமாக கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, இத்தொகைக்கு மேல் கொண்டு செல்லும்போது அதற்கான முறையான ஆவணங்கள் (வங்கிக் கணக்கு, ரசீது) வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் பறிமுதல் செய்யப்படும். இனிமேல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால், அதன் செலவு கட்சி மற்றும் வேட்பாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
