சென்னை: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் 1015 இடங்களில் திமுக கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமையல் காஸ் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக பயன்பட்டிற்கான சிலிண்டரின் விலை 115 ரூபாயையும் ஒன்றிய அரசு அதிகரித்தது.
இது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது தொடர்கிறது. சிலிண்டர்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கலால் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. திறந்திருக்கும் ஓட்டல்களில் உணவுப் பட்டியல் சுருக்கியுள்ளன.
இன்னும் சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை பாதிப்பு என்பது தொடர்கிறது. இதுதவிர, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலைக் கையாள்வது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
எரிவாயு விநியோகத்தைச் சீரமைக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் ஓட்டல்களுக்கு மின் கட்டணம் சலுகைகளையும் அறிவித்துள்ளார். எனினும், சர்வதேசப் பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மார்ச் 15ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் என 1015 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையை பொறுத்தவரை சென்னை கிழக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை வடக்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், சென்னை மேற்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, சென்னை தெற்கு-அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை மேற்கு- தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை தென்மேற்கு- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சென்னை வடகிழக்கு- எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘‘தமிழ்நாடு விஸ் என்டிஏ, தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் எந்தி முழக்கமிட்டனர். இதே போல மற்ற இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஆயிரக்கக்கானோர் கலந்து கொண்டனர்.
