வேப்பனஹள்ளி, மார்ச் 9: வேப்பனஹள்ளி அருகே விளை நிலத்தில் மின்மோட்டார், ஒயர்களை காட்டு யானைகள் நாசம் செய்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே கர்நாடகா மாநிலம் மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளான கட்டாயபீடு, காசிரிகானபள்ளி, கொங்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 3 யானைகள் முகாமிட்டு, இரவு நேரங்களில் வனப்பகுதியை யொட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காசிரிகானபள்ளி அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த 2 யானைகள், மஞ்சுண்டன் என்பவரது நிலத்தில் ஆழ்துளை கிணற்றின் பைப் மற்றும் மின் மோட்டார் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, ஒயர்களையும் பிடுங்கி எறிந்து துவம்சம் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக, இதே நிலை தொடர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்னளர். வனத்துறையினர் வனப்பகுதிக்குள் தினந்தோறும் யானைகளை விரட்டுவதும், அவை இரவு நேரங்களில் மீண்டும் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே, யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
