ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பிரசாரம்

 

கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரியில், இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, நாடக கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலம் மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில், போக்குவரத்து காவல் துறை சார்பில், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, நாடக கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கிருஷ்ணன் வேடம் அணிந்தவர், ஏன் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விளக்கம் அளித்தார். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவரை நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது. எனவே, விபத்தில் இருந்து தப்பிக்க அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என்று திரவுபதி வேடம் அணிந்த பெண் விளக்கம் அளிக்க, வாகன ஓட்டி ஹெல்மெட் அணிவதை தவிர்த்துவிட்டு, வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி கீழே விழ, அங்கு எமன் வேடம் அணிந்தவர் உயிரை பறிப்பது போல் தத்ரூபமாக நாடக கலைஞர்கள் நடித்துக் காட்டினர்.இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து எஸ்ஐ ஜோதி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: