- தமிழ்நாடு அரசு
- உயர் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காந்திகிராமம்…
சென்னை: சுகாதார ஆய்வாளர் நியமனம் தொடர்பான வழக்கில் 47 பணியிடங்கள் தவிர மற்ற பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1,400 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்திகிராம் கல்வி நிறுவனத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்திலும் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்திருந்த 47 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தகுதிபெற்ற இவர்களின் பெயரை, தற்காலிக தேர்வு பட்டியலில் சேர்த்து பிற தகுதிகளை பூர்த்தி செய்தால் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதார துறை சார்பிலும், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், கல்வி தகுதி சர்ச்சை வழக்கில் தொடர்புடைய 47 மனுதாரர்களுக்கும் 47 பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் எம்.சினேகா ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களில், 47 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மீதமுள்ள பணியிடங்களை 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி நிரப்பலாம்.காலியாக வைத்திருக்கப்படும் 47 பணியிடங்களையும், இந்த மேல் முறையீட்டு வழக்கின் முடிவின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு அரசின் மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக தள்ளிவைத்தனர்.
