×

2024-25ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரசாணை வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1534 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 100 லிருந்து 150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டதிற்கென ஆண்டிற்கு ரூ.6,98,08,000 தொடர் செலவினமாக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதுமை காலத்திலும் பொருள் வறுமை, தமிழ் தொண்டர் பெருமக்களை தாக்காவண்ணம் மாதம்தோறும் உதவித்தொகை ரூ.7500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. தமிழுக்காக தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழும் காலமெல்லாம் தமிழ் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.

தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்கு பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள்/ கைம்பெண் மகளுக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவ படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது. அதன்படி 2024-25ம் நிதியாண்டிற்கு சென்னை மாவட்டத்தில் 9 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், தருமபுரி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 6 பேருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 4 பேருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 2 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும், மதுரை மாவட்டத்தில் 3 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், தேனி மாவட்டத்தில் 4 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 2 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 34 மாவட்டங்களிலும் 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழக அரங்கில் நேற்று வழங்கினார்.

Tags : Minister ,M.P. Saminathan ,Chennai ,Tamil Nadu government ,Tamil Development Department ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...