*குடோன்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்
*விவசாயிகள் வலியுறுத்தல்
கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் அறுவடை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கொள்ளிடம் பகுதியில் 70 சதவீதத்திற்கு மேல் சம்பா அறுவடை பணி முடிவுற்று விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள நிலப்பரப்பில் இயந்திரம் மூலம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் லாரிகள் மூலம் எருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூர் மற்றும் எடமணல் ஆகிய பகுதியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு நெல் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன.
ஆனால் ஒரு வார காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நெல் சேமிப்பு குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதால் கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளி பகுதியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் நெல் மூட்டைகள் முழுமையான பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் கூடுதலான நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாமலும் இருந்து வருவதால், கடந்த சில தினங்களாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதனால் அறுவடை செய்த விவசாயிகளும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று நெல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படாததால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 900 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதற்கு பதிலாக வெறும் 200 அல்லது 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்லவும் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் அனைத்து நெல் மூட்டைகளையும் தாமதம் இன்றி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் ஒழுகைமங்கலம், திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், விசலூர், திருவிளையாட்டம், திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல்லை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் அரசு குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேங்கி கிடக்கின்றன.
கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாதால் புதிதாக விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அரசு குடோனுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
