*கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் புகார்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளுகிரி அருகே சாட்சி கையெழுத்து எனக்கூறி நிலத்தை அபகரித்துவிட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் புகார் மனு அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி பஞ்சாயத்து சின்னபேடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்டப்பா(80), தனது இரு மருமகள்கள் மற்றும் பேரன்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இரு மகன்கள், இரு மகள்கள். என் தந்தை காலத்தில் இருந்து சின்னபேடப்பள்ளியில், வசித்து வருகிறேன். எனக்கு பாத்தியப்பட்ட 25 சென்ட் நிலத்தில் எங்கள் வீடு, தோட்டம் உள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு என் இரு மகன்களும் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டனர். என் இரு மருமகள்கள், பேரன்களுடன் வசித்து வருகிறேன்.
என் சொத்துகளை என் மகன் வழி பேரன்களுக்கு, மாற்றி எழுத கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்தேன். அப்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் பெயரில் நிலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அவர்கள் வாங்கும் நிலத்திற்கு என்னை சாட்சி கையெழுத்து போட சொன்னார்கள்.
எனக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் கூறிய இடத்தில் கைரேகை வைத்தேன். அதனை வைத்து என்னை ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தேன். சூளகிரி போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்டும் முறையாக விசாரிக்கவில்லை. மாவட்ட கலெக்டர் விசாரித்து என் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
