*போலீசார் பேச்சுவார்த்தை
தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புக்களை மீட்க தமிழக அரசிற்கு கடந்த 6ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, கெலமங்கலம் பேரூரில் உள்ள ஜீவா நகர், விருப்பாச்சி நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாததால் தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை தலைமையிலான வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையர் ராஜா, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கர் தலைமையிலான போலீசாருடன் இனைந்து கட்டிடங்களை இடித்து ஆக்கிரமிப்புக்களை மீட்டனர்.
அப்போது, விருப்பாச்சி நகரில் அண்ணாநகரில் 1120 சதுர அடியில், அடுக்குமாடி கட்டிடத்தை அகற்றும்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதனை தொடர்ந்து ராயக்கோட்டை சாலையில் உள்ள விருப்பாச்சி நகரில், கல்அறுக்கும் தொழிற்சாலை கடும் எதிர்ப்பை மீறி 15,177 சதுரஅடி நிலத்தை மீட்டனர்.
இதனை தொடர்ந்து அதன் அருகே கங்கேஷ்(40) என்பவர் கோயில் நிலத்தில் 914 சதுர அடியில் புதியதாக கட்டிவந்த அடுக்குமாடி வீட்டை பொக்லைன் மூலம் இடிக்க முயன்றனர். அப்போது, கங்கேஷ் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு மொட்டை மாடிமீது ஏறி வீட்டை இடித்தால் தீக்குளிப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், பதற்றமடைந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்சை வரவழைத்து நிறுத்தினர். இதனையடுத்து ஏடிஎஸ்பி சங்கர் மற்றும் தாசில்தார் கங்கை மற்றும் இந்து சமய அறநிலைத்துயினர் ஆகியோர் கங்கேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கங்கேஷ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் 2 நாட்கள் அவகாசம் கேட்டனர்.
இதனையடுத்து தற்காலிகமாக வீடு இடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு அதிகாரிகள் அனைவரும் திரும்பி சென்றனர். தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கினர். வீட்டை இடிக்க வந்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கெலமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
