ஆந்திர மாநிலத்தில் மாதம் 60 கிலோ ரேஷன் அரிசியுடன் கூட்டு குடும்பத்தை ஊக்குவிக்க 3 படுக்கை அறை வீடு வழங்கப்படும்: மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், அமராவதியில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: மாறிவரும் குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூகத்தில் மக்கள்தொகை வீழ்ச்சியின் சவால்களை எதிர்கொள்ள ‘மக்கள்தொகை மேலாண்மை’ என்ற புதிய அணுகுமுறையை செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக கூட்டுக் குடும்பங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு சிறப்பு திட்டம் உள்ளது.

கூட்டுக் குடும்பங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. எனவே ரேஷன் பொருட்கள் மற்றும் ஓய்வூதியத்திற்காக மட்டும் குடும்பங்களைப் பிரிக்கக்கூடாது. வயதான காலத்தில் பெற்றோர்கள் தனியாக விடப்படும் நிலை மாற வேண்டும். இந்த சூழலில், பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க அரசாங்கம் புரட்சிகரமான முடிவுகளை எடுக்கப்போகிறது.

கூட்டுக் குடும்பங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், வாழ்வதற்கு மூன்று படுக்கையறை வீடுகள், அத்துடன் மாதத்திற்கு 60 கிலோ வரை ரேஷன் அரிசி வழங்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மனைவி குழந்தை பெற்றால் கணவனுக்கும் விடுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கும் 2 மாதங்களுக்கு ‘மகப்பேறு விடுப்புகள்’ (தந்தைவழி விடுப்புகள்) வழங்கப்படும் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

Related Stories: