சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா, சிஐடியு அகில இந்திய துணை தலைவர் மாலதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அபிராமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோதண்டம், அகில இந்திய தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெருமாள் ஆகியோர் இணைந்து அரசியல் கட்சிகளுக்கான கோரிக்கை சாசனத்தை வெளியிட்டனர்.
இதன் பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசியதாவது: வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சிகள் பெண்கள் நலன், இளைஞர்நலன், விவசாய நலன் ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும், குறிப்பாக, நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை சட்டமாக்க வேண்டும், போதை கலாச்சாரத்தை தடுக்க டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
சாதி ஆணவக்கொலையை தடுப்பு சிறப்புச்சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதுதவிர, மாவட்ட அளவில் மாதந்தோறும் ஆட்சியர் தலைமையில் மகளிர், குழந்தைகள் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும், 13-19 வயது குழந்தைகள் கருத்தரித்தல் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் நலக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எங்களது அமைப்புகள் கோரிக்கையை முன்வைக்கின்றன.
பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ளதுபோல் தனியார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால சலுகை வழங்க வேண்டும். துணிக்கடை போன்ற பெண்கள் அதிகம் பணியாற்றும் இடங்களில் தொழிலாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டுமென்ற உத்தரவை அரசு கறாராக அமல்படுத்த வேண்டும்.
மேலும் அரசுத் துறைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை அரசு நடத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் ஒதுக்கீடு தர வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
