தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

தூத்துக்குடி,பிப்.10: மாதாந்திர உதவித்தொகையை 3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் 2016-ன் படி தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்பினை உத்தரவாதப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முனீஸ்வரன், அந்தோணிசாமி, ஆறுமுகம், வடிவேலு, ஆலோசனைமரியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் இம்மானுவேல், மெய்யழகன், முருகன், காசி, வயனபெருமாள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சர்க்கரையப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துமாலை, நகர தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மந்திதோப்பு செல்வராஜ், செண்பகபேரி ராமச்சந்திரன், துரைச்சாமிபுரம் ஈஸ்வரி, சிதம்பராபுரம் கருப்பையா, சண்முக நகர் வேல்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். விளாத்திகுளம்: விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் புவிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து, மலைக்கனி, பார்வையற்றோர் சங்கம் ரவிக்குமார், மாரிமுத்து உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டு விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் அனைத்து வகை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாடசாமி, மணி மந்திரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாய், ஞானப்பிரகாசம், கந்தசாமி, ஐயப்பன், பொறுப்பாளர்கள் சுப்பையா, சங்கரசுப்பு, நம்பி, மாரிமுத்து, கனகா, வெங்கடேச பெருமாள், மந்திரமூர்த்தி, ராஜா, மல்லிகா, நாகராஜன், பேச்சியம்மாள், கிருஷ்ணவேணி, துரைராஜ், ராஜாராம் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories: