அமெரிக்காவிற்கு பதில் இங்கிலாந்தில் போர் விமானங்கள் குவிப்பு; நிபந்தனையின்றி சரணடைய ஈரானுக்கு டிரம்ப் கெடு: தரைவழி தாக்குதல் நடத்த நேரமில்லை என தடாலடி அறிவிப்பு

 

லண்டன்: ஈரான் நாட்டின் ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது பி-1பி லான்சர் ரக போர் விமானங்களை இங்கிலாந்தில் களமிறக்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் நாட்டின் அணுசக்தி ஆய்வு மையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான படைகள் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் ரக விமானங்கள் மற்றும் பி-1பி விமானங்கள் இணைந்து கடந்த 72 மணி நேரத்தில் ஈரானுக்குள் சுமார் 200 இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளன.

இந்த சூழலில், தாக்குதலின் வேகத்தை மேலும் அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று அமெரிக்காவின் பி-1பி லான்சர் ரக கனரக போர் விமானங்கள், இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் (ஆர்.ஏ.எப்) ஃபேர்ஃபோர்ட் தளத்தில் தரை இறங்கின. ‘தி போன்’ என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன விமானங்கள், சுமார் 34 டன் எடை கொண்ட வழிகாட்டப்பட்ட மற்றும் வழிகாட்டப்படாத ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. அமெரிக்காவில் இருந்து நேரடியாக சென்று தாக்குதல் நடத்தி திரும்ப 37 மணி நேரம் ஆகும் நிலையில், இங்கிலாந்து தளத்தை பயன்படுத்துவதன் மூலம் தாக்குதல் நடத்தும் கால அளவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1ம் தேதியன்று இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், ஈரான் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து மண்ணில் உள்ள விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி அளித்து தனது முந்தைய முடிவை மாற்றிக்கொண்டார். இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை முடக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்கள் இனிமேல் வரும் நாட்களில் அதிரடியாக அதிகரிக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ஈரான் நாட்டின் தலைமை நிபந்தனையற்ற சரணடைதலை அறிவிக்கும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும். ஈரானின் ஏவுகணை திட்டங்களை மீண்டும் கட்டமைக்க குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும் அளவிற்கு சேதங்கள் ஏற்படுத்தப்படும்.

எனவே ஈரான் நிபந்தனையற்ற சரணாகதி அல்லது ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். தரைவழி தாக்குதல் நடத்துவது நேரத்தை வீணடிக்கும் செயலாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார். தற்போது ஈரானும் பதிலடி கொடுக்க முயற்சிப்பதால் டெல் அவிவ் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ராட்சத பதுங்குக்குழிகள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம் நேற்று ‘ஆபரேஷன் ரோர் ஆப் தி ஹாரியர்’ என்ற பெயரில் ஈரான் மீது மாபெரும் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் விமானப்படையை சேர்ந்த 50 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. டெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் தலைவர்கள் தங்கும் இடத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த ராட்சத நிலத்தடி பதுங்குக்குழியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் ‘மொசாத்’ உளவு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகள் வீசப்பட்டதில் அந்த பதுங்குக்குழி முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

முன்னதாக தாக்குதல் நடந்த போது பிப்ரவரி 28ம் தேதி நடந்த தாக்குதலில் தப்பிய ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அந்த பதுங்குக்குழிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் டெஹ்ரானில் இணைய சேவை ஒரு சதவீதம் என்ற அளவுக்கு முடங்கியுள்ளது. இதற்கிடையே ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

34 டன் வெடிகுண்டு வீசி அழிக்க முடிவு
அமெரிக்க விமானப்படையின் ‘பி-1பி லான்சர்’ ரக போர் விமானங்களை ‘எலும்பு’ என்று அழைக்கின்றனர். இந்த அதிநவீன போர் விமானங்கள், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த பி-1பி லான்சர் விமானங்கள் சுமார் 34 டன் எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. மணிக்கு 900 மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானங்கள், 24 குரூஸ் ஏவுகணைகளை ஏவும் வசதி மற்றும் எதிரி நாட்டு ரேடார்களை முடக்கும் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளன. தெற்கு டகோட்டாவில் உள்ள எல்ஸ்வொர்த் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பி வரும் இந்த விமானங்கள், இனிமேல் இங்கிலாந்து தளத்தில் இருந்து ஈரானை மிக எளிதாக தாக்கும் வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது.

3வது லேயர் மட்டுமே பாக்கி
வெள்ளை மாளிகையில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு 10க்கு 15 மதிப்பெண்களை வழங்குவேன். ஈரானின் ராணுவம், கடற்படை மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் இரண்டு அடுக்கு தலைவர்கள் கொல்லப்பட்டு, தற்போது மூன்றாவது அடுக்கு தலைவர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களின் விமானப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. ஈரானிடம் இருந்த 32 போர்க்கப்பல்களும் தற்போது கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக எங்கள் மக்கள் ஈரானால் கொல்லப்பட்டனர். அவர்களின் குண்டுவெடிப்புகளால் எங்கள் வீரர்கள் கை, கால்களை இழந்து முகம் சிதைந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளாகினர். இதை வேடிக்கை பார்ப்பதா அல்லது நடவடிக்கை எடுப்பதா என்ற நிலையில், நாங்கள் பதிலடி கொடுக்க முடிவு செய்தோம். வெனிசுலாவில் நடந்த ராணுவ நடவடிக்கை மற்றும் பி-2 ரக போர் விமானங்கள் மூலம் ஈரானின் அணுசக்தி திறனை அழித்தது என அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளை உலகமே வியந்து பார்க்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அமெரிக்காவிற்கு உலக அளவில் பெரிய மரியாதை கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Stories: