நிதிஷூக்கு நடந்தது எடப்பாடிக்கும் நடக்கும்… தேர்தலுக்கு பிறகு காலி அதிமுகவை பாஜ விழுங்கும்: அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக -பாஜ கூட்டணி பொருந்தாத கூட்டணி. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கூட்டணி. இது மூழ்கும் கப்பல் போன்றது. தெரியாமல் சிலர் அதில் ஏறியுள்ளனர். விரைவில் அவர்கள் இறங்கும் சூழல் வரும். இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி. தமிழ்நாடு மக்கள் தலைநிமிர்ந்து வாழும் வகையில் செயல்படும் கூட்டணி. ஆனால் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டின் உரிமைகளை தலைகுனியச்செய்யும் கூட்டணி.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் நிலைமை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதை பார்க்கலாம். அதுபோல அதிமுகவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜ முயற்சி செய்து வருகிறது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக தனித்த கட்சியாகத்தொடருமா அல்லது பாஜ அதை விழுங்குமா என்பது தெரிய வரும். காங்கிரசில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் இறுதி முடிவை கட்சி தலைமையே எடுக்கும். அந்த முடிவின்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வன்கொடுமை எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது.

கலவரம், சாதி அடக்குமுறை போன்றவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை. அதிமுக ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் நிலையையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு முயற்சி செய்கிறது. தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநிலம் என்று ஒன்றிய அரசே கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: